உள்ளூர்

அரச துறை பலமடைவது நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமான விடயம் என்கிறார் ஜனாதிபதி

அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான ஊடகத்திற்கு விரிவான அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரச ஊடக நிறுவனங்களுக்கும், சுதந்திரமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளின் செய்தியாளர்கள் இலத்திரனியல் ஊடகங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் தகவல்களை மாத்திரம் எடுத்துச் செல்வதன் மூலம் அரச ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டியுள்ளது. அதனால், சமநிலையாக தகவல்களை வழங்குவது அரச ஊடகங்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. எனினும், அதன் பயன் இன்னமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சலுகை காரணமாக பெரும்பாலான நிறுவனங்களுக்கு இலாபம் கிட்டியுள்ளது. இரும்பு ஆணியின் விலை கூட குறைவடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தேர்தலை மார்ச் மாதமளவில் நடத்த வாய்ப்பு உள்ளது. அந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் ஒரு உறுதியான அரசாங்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது. 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை தெளிவுபடுத்திய அவர், இந்தத் திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
காணாமல் போனவர்களின் பிரச்சினை அரசியல் மயமாகியிருப்பதால், மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் சில அரசியல் குழுக்கள் தமது அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதற்காக இதனைப் பயன்படுத்தி வருகின்றன. தேசிய பாதுகாப்பு பலமடையும் போது தேசிய ஐக்கியம் பாதுகாக்கப்படும். இதற்குத் தேவையான சூழல் நிச்சயம் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மக்களுக்குத் தேவைப்படுவது அதிகாரப் பகிர்வையும் விட சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்துவதாகும். ஆனைத்துத் துறைமுகங்களும் அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்பது தனது கருத்தாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.