உள்ளூர்

இலங்கையை முன்பை போன்று சிறந்த வேலைத்தளமாக மாற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிறந்த வேலைத்தளமாக காணப்பட்ட இலங்கையை மீண்டும் அதே நிலைக்கு எடுத்துச் செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகள், அரச ஊழியர்களுக்கு உயர்ந்தபட்ச வசதிகளை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

நிதி மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தின் பொருளாதார ரீதியான வெற்றிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை ஆறு தசம் ஐந்து சதவீதத்தினால் பேண முடிந்தது. இந்தக் காலப்பகுதியில் 24 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி 2014ஆம் ஆண்டளவில் 79 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தது.

இரண்டு பில்லியன் டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கம் 7 தசம் இரண்டு டொலர்கள் வரை அதிகரித்தது. ஒரு டொலரின் பெறுமதி 130 ரூபாவாக காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. 2005ஆம் ஆண்டில் காணப்பட்ட 91 சதவீதமான கடன்சுமை 2014ஆம் ஆண்டில் 71 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

2015ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் நிதிக் கட்டமைப்பு பலமிழக்க ஆரம்பித்தது. பணவீக்கம் அதிகரித்தமையினால் நாட்டின் கடன்தொகை கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்து 760 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. நாணயத்தின் பெறுமதியும் இந்தக் காலப்பகுதியில் வீழ்ச்சி கண்டது.

அரச அதிகாரிகளுக்கு எப்.சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை நாட்டின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. வியாபாரிகளை முதலீடுகளில் ஈடுபடுத்த செய்வதற்கான நிலை ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.