உள்ளூர்

நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து, சகல பிரஜைகளும்; இன, மத பேதங்களுக்கு அப்பால் கௌரவமாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, இராணுவத்தை ஈடுபடுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.  இராணுவ ஆட்சியை நாட்டில் முன்னெடுக்க எந்தவொரு அபிப்பிராயமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மிஹிந்தலை புனித பூமிக்கு நேற்றுச் சென்ற பாதுகாப்புச் செயலாளர், விஹாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வௌ; தம்மரத்ன தேரரைச் சந்தித்தார். அதன் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் மத்தியில் அவசியமற்ற பீதியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது என பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தான் பொறுப்புடன் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து, சகல பிரஜைகளும்; இன, மத பேதங்களுக்கு அப்பால் கௌரவமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்குவதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சகலரினதும் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், பொதுமக்களைத் தெளிவூட்டல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்தல் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.