உள்ளூர்

தாய்லாந்து பிரதமர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூன் ச்சன்-ஓ-ச்சா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தாய்லாந்து பிரதமருக்கு அங்கு இராணுவ மரியாதையும், அணிவகுப்பும் வழங்கப்படவுள்ளது.

தாய்லாந்து பிரதமர் தனது விஜயத்தின் போது பல உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது குறித்து கலந்துரையாடப்படும். தாய்லாந்து பிரதமர் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

தனது விஜயத்தின் போது ஸ்ரீ தலதா மாளிகையை தரிசிக்கவுள்ள தாய்லாந்து பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர்களையும் சந்திக்கவுள்ளார். பேராதனை தேசிய தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.