உள்ளூர்

இன்று உலக சுற்றாடல் தினம் - வாழ்க்கை முறையை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்

சுற்றாடல் மாசடைவதால் உயிர்கள் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தலைப் புரிந்துகொண்டு சுற்றாடல் நேய வாழ்க்கை முறையை அனுசரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்த விசேட செய்தியில் இந்தக் கருத்து இடம்பெற்றுள்ளது. இன்று தேவைப்படுவது இயற்கை மீதான வர்ணனைகள் அல்ல. சுற்றாடல் மாசடைதலை தடுத்து நிறுத்தக்கூடிய உண்மையான செயற்பாடுகளாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் விசேட செய்தியை விடுத்துள்ளார். சுற்றாடலின் முக்கியத்துவம் பற்றிய பரந்த கருத்தாடலை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். மனித குலத்தின் இருப்பை மாத்திரமன்றி ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் இருப்பையும் கருத்திற்கொண்டு முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் என பிரதம மந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்திற்கான செய்தி மிகவும் எளிமையானது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குத்தரெஸ் தெரிவித்துள்ளார். ஒரே தடவை பயன்படுத்தும் பிளாஸ்ரிக்கை நிராகரிக்க வேண்டும். மீள் சுழற்சி செய்யமுடியாததை ஒதுக்கித் தள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.