உள்ளூர்

சுற்றாடல் பாதுகாப்பு சகலரதும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு – ஜனாதிபதி

சுற்றாடலைப் பாதுகாக்கும் முயற்சியில் தமது செயற்பாடுகளை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் வருடம் பூராவும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முயற்சியில் அரசியல்வாதிகள், அரச உத்தியொகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் அடங்கலாக சகல பிரஜைகளும் இணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்று கேகாலையில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழாவில் ஜனாதிபதி உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று நிகழும் சுற்றாடல் மாசடைதல் காரணமாக நாளைய சந்ததியின் வாழ்க்கை கேள்;விக்குறியாக மாறியுள்ளது என்றார். வளர்ச்சி கண்ட நாடுகள் சுற்றாடலை மாசுபடுத்துவதால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ள விதத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சூழலியல் தொகுதியைப் பாதுகாக்க துரித நடவடிக்கை எடுப்பது அவசியம். இது தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். அரசாங்கம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்களை அமுலாக்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டைபோட சிலர் முனைந்தார்கள். இது மிகவும் துரதிஷ்டவசமான நிலையென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்றைய நிகழ்வில் கேகாலை மாவட்டத்திற்கான சுற்றாடல் கையேடு வெளியிடப்பட்டது. கொழும்பு, திருகோணமலை, காலி, ஹம்பாந்தோட்டைத் துறைமுகங்களில் உயிர்பன்முகத் தன்மை பற்றிய சூழலியல் தகவல்களைத் திரட்டிய ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுபோன்றே பொத்துவில் பாணம பிரதேசத்தில் 100 ஹெக்டயருக்கு மேற்பட்ட மணற்குன்றுகள் அடங்கிய வலயம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டது. மாத்தளை, உக்குவல பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பன்சலதன்ன நீரேந்து தொகுதியும் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக நேற்று அறிவிக்கப்பட்டது.