உள்ளூர்

காலநிலை சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் - அமைச்சர் பழனி திகாம்பரம்

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் நிர்க்கதியான பெருந்தோட்ட மக்களுக்கு கூடிய விரைவில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப் போவதாக மலைநாட்டு, புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பின்னர், அமைச்சர் கருத்து வெளியிட்டார். நோர்வூட், மஸ்கெலியா, சாமிமலை, தலவாக்கலை, லிந்துலை, நானுஓயா முதலான பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தார். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் ஐயாயிரம் வீடுகள் இனங்காணப்பட்டுள்ளன. தமது அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கையில், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.