உள்ளூர்

சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களுக்கு தாக்கம் - 38 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள். அடைமழை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 38 ஆயிரத்து 46 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆறாயிரத்து 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொள்ளாயிரத்து 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன. 19 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று வர்த்தக நிலையங்களும், பிரதான ஐந்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் இடங்களும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. களனி கங்கை, களுகங்கை, நில்வளா கங்கை, மகாவலி கங்கை என்பனவற்றின் நீர் அதிகரித்துள்ளதோடு, மஹாஓய, அத்தனகல்லஓய என்பனவற்றிற்கு அருகில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன.

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அபாயம் இன்று மாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் பொருந்தும். இந்த மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மண்சரிவு, கற்கள் விழுதல், நிலப்பகுதி கீழ்நோக்கிச் செல்லுதல் போன்றவை இடம்பெறலாம் என்று தேசிய கட்டட ஆராய்;ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் குளயாப்பிட்டிய பிரதேசத்தில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகியிருக்கிறது. இது 194 தசம் ஆறு மில்லிமீற்றர்களாகும். தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் 112 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்மலசூரிய பிரதேசத்தில் 107 தசம் ஒன்பது மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியிருக்கிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கூடுதலான மழைவீழ்ச்சி பதிவாகியிருக்கிறது. லக்ஸபான, கொத்மலை, கெனியா, நோர்ட்டன், காசல்ரி போன்ற பகுதிகளில் 120 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.