Sat03282020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

சபாநாயகருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

சபாநாயகர் ஆரம்பத்தில் புதிய பிரதமரை அங்கீகரித்து, சில தினங்களுக்குள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமைக்கு காரணமாக அமைந்த விடயங்களின் அடிப்படையில், முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற சபாநாயகர் அரசியல் யாப்பிற்கு முரணாக, தார்மீக விழுமியங்களை மீறும் வகையில் தன்னிச்சையாக செயற்பட்டு மக்கள் அபிலாஷைகளை மீறுகிறார் என்று தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் குற்றச்சாட்டாகும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அரசாங்கம் வலியுறுத்தல்.

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை கிடையாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சில குழுக்கள் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக திட்டமிட்ட ரீதியில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இத்தகைய ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் மாற்றத்தைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளே தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் அவலங்களுக்கு காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தேவை தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

அபிவிருத்திகளை யார் முன்னெடுப்பது எனும் இழுபறி நிலையே கடந்த ஆட்சியில் மக்களுக்கு அந்த அபிவிருத்திகள் கிடைக்காமல் போனது என பிரதியமைச்சர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியும் கலந்து கொண்டு அமைச்சின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

துருக்கியின் புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளையும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

துருக்கியின் தற்போதைய புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளும் விருத்தி காணும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெஸப் தையிப் அர்துகான் தெரிவித்துள்ளார். நேற்று துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றதான் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், பொருளாதாரம், பாரிய அளவிலான முதலீடு என அனைத்துத் துறைகளும் விருத்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30ற்கு ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பர்க் நகரில் ஆரம்பமாகும். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போட்டியை பார்வையிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸ் தோல்வியடையாமல் முன்னோக்கி வந்துள்ளது. தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ் வந்துள்ள ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்தத் தொடரில் சவால் விடுக்கும் அணியாக பெல்ஜியம் அணி இன்று போட்டியிடுகின்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பெல்ஜியம் அணி முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை பெறும். இதுவரை நான்கு கோல்களை பெற்றுள்ள பெல்ஜியம் அணி வீரர் ரொமேலு லுக்காலு மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறும்.

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் மூன்றாம் நிலையை தெரிவு செய்வதற்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும். இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்கு தேவையான பின்னணியும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான பின்னணி மற்றும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது மிகவும் சவால் மிக்க காரியமாகும். பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டவர்களுடன் மிகவும் பொறுமையுடனும், அவதானமாகவும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Read more...

தாய்லாந்து பிரதமர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூன் ச்சன்-ஓ-ச்சா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தாய்லாந்து பிரதமருக்கு அங்கு இராணுவ மரியாதையும், அணிவகுப்பும் வழங்கப்படவுள்ளது.

Read more...

நாட்டில் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்துள்ள கருத்துக்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு

நாட்டின் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் முன்வைத்த கருத்தை சட்டத்தரணிகள் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.

Read more...

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தி குறித்து விரைவில் பாராளுமன்றத்தில் விவாதம்

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளிப்படுத்திய கடந்த அரசாங்கத்தின் நிதி மோசடி குறித்து ஜனாதிபதி விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

Read more...

ஆயிரம் குளங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பம்

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டி மஹகிரில்ல, கல்கடவல குளத்தில் ஆரம்பமாகும். விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தும் நாம் வளர்த்து, நாம் உண்ணுவோம் என்ற துரித விவசாய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 18 செயற்றிட்டங்களில் இது முக்கியமானதாகும். அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்.

நாட்டில் உள்ள பழைமைவாய்ந்த பல குளங்கள் உரிய முறையில் நிர்வகிக்கப்படாததால், மிகவும் பாழடைந்த நிலைமையில் காணப்படுகின்றன. இதன்படி, இந்த வருடத்திற்குள் ஆயிரம் குளங்களையும், அந்தக் குளங்களின் கீழ் உள்ள ஆயிரம் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு மஹிந்த அமரவீர கமநல அபிவி;ருத்தித் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். முதற் கட்டமாக 370 குளங்கள் புனரமைக்கப்படும். இந்தப் பணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 900 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது

தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள சிறுவர்களுள் மேலும் இருவரை சுழியோடிகள் மீட்டுவந்துள்ளனர். எஞ்சியுள்ள எட்டு சிறுவர்களையும் அவர்களின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரையும் மீட்பதற்கான ஆபத்தான நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் திகதி குகைக்குள் சென்று சிக்கிய சிறுவர்களை ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். எனினும், தொடர்ந்து குகைக்குள் மழைநீர் பெருகியதால், அவர்களை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனால், சிறுவர்களுக்கு நீச்சலை பழக்கி, வெளியே கொண்டு வருவதற்கு சில மாதங்கள் கூட ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்ததால், நீர் மேலும் பெருகும் ஆபத்தை கருத்திற் கொண்டு சிறுவர்களை மீட்பதற்கு ஆபத்து நிறைந்த நடவடிக்கையை சுமார் 100 சுழியோடிகள் இணைந்து ஆரம்பித்தனர். இதன் மூலம் நேற்று வரை நான்கு சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

புறக்கோட்டை - செட்டியார் தெருவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தன் கொல்லப்பட்டுள்ளார்.

நவோதயா கிருஷ்ணா என்று அறியப்பட்ட இவர், கொழும்பு மாநகரசபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 40. கொழும்பு புறக்கோட்டை ஆண்டிவாழ் தெருவில் பழக்கடை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பமாகிறது

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமம் அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தை மூன்று ஆண்டுகளில் பூர்;த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதனை துரிதமாக நிறைவுசெய்து ஆயிரத்து 500 கிராமங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் பரியுத் ச்சான் ஓ ச்சா இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் பரியுத் ச்சான் ஓ ச்சா இலங்கை வருகிறார்.

அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்திப்பார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க, தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பப்படும்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.

அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். பரீட்சைக்கான கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். இம்முறை பரீட்சையில் மூன்று வினாத்தாள்களுக்காக வினாக்களை வாசித்து, புரிந்து கொள்வதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் இந்த ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இதில் 300 கோடி ரூபாய் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. 875 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 90 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியளவில் இரண்டாயிரத்து 500 வீடுகளை மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச, பிரசன்ன ரணவீர ஆகியோர் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி தொடர்ந்தும் விமர்சிக்கப்படுகிறது

பாராளுமன்றத்தில் கடந்த 3ஆம் திகதி கூட்டு எதிரணியைச் சேர்ந்த விமல் வீரவங்ச, பிரசன்ன ரணவீர ஆகியோர் நடந்துகொண்ட விதம் குறித்து தொடர்ந்தும் சமூகத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவர்களது செயற்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். அவர்கள் இருவரது நடத்தை முழுப் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகும் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவும் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற விவாதங்களின் போது முறையான சொற்பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், எந்தவோர் உறுப்பினருக்கோ அல்லது நபருக்கோ துன்புறுத்தலையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ளக் கூடாது என்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென்று ஜனாதிபதி உறுதி

சயிற்றம் கல்வி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு நாட்டில் நிர்வாகத்தில் இருந்த எந்தவொரு அரச தலைவரும் பங்களிப்பையும், அர்பணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சினை தீர்வுக்கு தாம் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more...

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆறாவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பிரதமர் ஞாயிற்றுக்கிழமை பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆறாவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக இடம்பெறும் சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். தூய்மையான சூழல் என்ற தொனிப்பொருளில் மாநாடும் இங்கு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை இவற்றில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணமாகவுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீசின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை நகரங்கள் தொடர்பான மகாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் நகர அபிவிருத்தி சுற்றாடலைப் பாதுகாத்து என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார். புதிய உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறா நகரத்தை உருவாக்குதல் என்பதே இம்முறை இம்மாட்டின் தொனிப்பொருளாகும்.

நிர்வாகத்துறையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி உதய ஆர் செனவிரத்ன ஜனாதிபதியின் செயலாளராக நியமனம்

முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான உதய ஆர் செனவிரத்ன ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டார். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றிய உதய ஆர் செனவிரத்ன சில மாதங்களுக்கு முன்னர் இந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் அரச சேவையில் பணியாற்றிய பாரிய அனுபவத்தை கொண்ட அதிகாரியாவார். இதற்கு முன்னர் விளையாட்டு பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு மேம்பாடு, திறன் ஆக்கல் மேம்பாடு, சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். அது மாத்திரமின்றி வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் ,நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பிரதி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பொல்கொல்ல கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

விவசாயப் பண்ணைககளில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ராஜாங்கனை விவசாய பண்ணையில் ஆரம்பமாகவுள்ளது.

வுpவசாயப் பண்ணைகளில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வை வழங்வதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று ராஜாங்கன விவசாயப் பண்ணையில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. நீண்டகாலமாக விவசாயிகள் மற்றும், விவசாய அமைப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியு;ள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவையும் இதன் கீழ் இடம்பெறவுள்ளது. பிரச்சினைகளுககு ஒரு வார காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதே இ;ந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் எண்ணக் கருவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தில் ஓடைகளும் புனரமைக்கப்படவுள்ளன.